உயிர்த் தத்துவம் அறிவோம்!


பிறவிகள் தொடரக்கூடிய இயல்படையவை என்பதை உலகிற்கு ஆணித்தரமாக உணர்த்தியவர்கள் நம் முன்னோர்கள்!

இவ்வாறு தொடரும் உயிர்கள் தங்களின் முற்பிறவி வாழ்விற்கேற்பத்தான் அடுத்த பிறவியினை அமைத்துக் கொள்ள முடியும் என்பதையும் நம் முன்னோர்கள் அறிந்துள்ளனர்.

முற்பிறவியில் செய்த வினைகளுக்கு ஏற்பவே அவர்தம் அடுத்த பிறவி அமையும் என்பதும், 

முற்பிறவியில் கொடியவர்களாக விளங்கியிருப்பின் அவர்தம் ஊழ்வினை அடுத்த பிறவியில் தொடரும் என்பதையும் உணர்ந்த நம் முன்னோர்கள் 

வாழ்க்கை முறையில் கடைப்பிடிக்க வேண்டிய எச்சரிக்கையாக ஊழ்வினையைத் தவிர்த்து வாழ்ந்து வந்துள்ளனர்!

வள்ளுவமும் ஊழ்வினை எனக் குறிப்பிட்டுப் பிறவிகள் உண்டென உறுதிபடுத்தியுள்ளார்! 

அதே சமயம் அவரது குறளிலுள்ள கருத்துகளுக்குத் தவறாகத் தெளிவுரைகள் வழங்கப்பட்டு தவறான அர்த்தம் கொள்ளப்பட்டுவிட்டது! 

உதாரணத்திற்கு எழு பிறப்பும், எழுமை எழுபிறப்பும் என அவர் எழுதியுள்ள பல குறள்களுக்கும் தெளிவுரை எழுதிய அறிஞர்கள் பக்தி மார்க்கத்தவர்களாக இருந்ததால் 

அவரது கருத்தாகிய எழு பிறப்பு என்பதை ஏழு பிறவிகள் எனத் தவறாகக் குறிப்பிட்டுவிட்டனர்!

அதிகாலைப் பொழுதில் வானில் உதிக்கும் கதிரவனைப் பார்க்கும் ஒவ்வொரு நாளும் எழுஞாயிறு எனத்தான் இன்றுவரை தமிழினம் அழைத்துப் போற்றி வந்துள்ளது! 

உண்மையில் கதிரவன் நிலையாக இருக்க அதைச் சுற்றி வரும் பூமியில் வாழும் மனிதன்தான் ஞாயிறு தினமும் தோன்றி மறைவதாகக் கற்பனை செய்து கொண்டான்! 

தமிழும் இதற்கு விதிவிலக்கல்ல! எனவேதான் எழுஞாயிறு எனக் குறிப்பிட்டுத் தினமும் உதிக்கும் ஞாயிறைப் போற்றியது!

இதை அடிப்படையாகக் கொண்டுதாம் வள்ளுவர் தெளிவாகப் பிறவிகள் எழுகின்ற இயல்பினை உடையது என உறுதிபடப் பாடி வைத்தார்! 

நாம்தான் இதனை மதவாதிகள் பரப்பிய ஏழு பிறவிகள் எனத் தவறாகப் புரிந்துகொள்ளும் மன நிலைக்குத் தள்ளப்பட்டோம்!

மிகச்சிறந்த பகுத்தறிவாளராக விளங்கிய பட்டினத்தாரும் பிறவிகள் உண்டென்பதை ஆணித்தரமாக அப்பன் எத்தனை அப்பனோ அம்மை எத்தனை அம்மையோ எனத் தம் தாய்மைப் புலம்பலில் பாடி வைத்தார்!

ஒவ்வொரு மனிதரும் தம்முடைய எண்ணங்களை ஆழ்மனதில் செழுத்தினால் தாம் சென்ற பிறவியில் எத்தகையவராக இருந்திருப்போம் என்பதை நிச்சயம் உணர முடியும்!

அப்பொழுதுதான் இன்றும் தம் பிறவி அறியாமல் வாழ்ந்து வரும் பாரதிகளும் காந்திகளும் தெரசாக்களும் தம் சுயம் உணர்ந்து  மீண்டும் உலகு தழைக்கப் பாடுபட முடியும்!

மேலும் தமிழ் மொழி ஒன்றுதான் பிறப்பின் அர்த்தத்தை முழுiமாக உணர்ந்து அதற்குரிய பெயரைத் தந்து சிறப்பித்துள்ளது! 

உலகில் மனித இனம் தவிர்த்த தாவர இனத்தை தமிழ்மொழி பயிர் என அழைக்கிறது! 

அது போலவே மனித தேகத்தில் நிலை பெறுவதை உயிர் என அழைத்தது!

பயிர்கள் எப்படித் தொடர்ச்சியாகத் தோன்றி வளர்ந்து வாழ்ந்து மடிந்து மீண்டும் பிறந்து வாழ்கிறதோ

அவ்வாறே உயிர்களும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மடிந்து மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து வாழ்கின்றன!

இதில் வியப்பிற்குரிய செய்தி என்னவென்றால் 

முந்தைய பிறவிகளில் தாம் எவ்வாறு இருந்தோம் என்பதை உயிர்கள் அறிந்திராத வகையில் ஏற்படுத்தப்பட்ட இயற்கை இரகசியம்தான்

 மனித குலம் அறியாத வேடிக்கை விந்தை!

ஒரு பயிர் பயிராகவே இருந்து விட்டால் பயனேதுமின்றிப் போய்விடும்! 

அதுவே ஒரு நெற் பயிராகத் தொடக்கத்தில் நாற்றாக இருந்து

பின்னர் வேறு இடத்தில் பிடுங்கி நட்டுச் சரியாகப் பராமரிக்கும்போதுதான் 

செழித்து வளர்ந்து நெல்மணிகளை உற்பத்தி செய்து மக்களுக்கும், 

வைக்கோலாகி மாடுகளுக்கும் 

அதன் பின்னர்ச் சாணமாகி உரமாகவும்

விராட்டியாகி எரிபொருளாகவும் பயனாகிறது! 

ஒரு கனி தரும் மரமாக அந்தப் விளங்கினால் வளர்ந்து ஆளாகிக் குளிர்ந்த நிழல் தந்து 

பகலில் சுவாசிக்க ஆக்சிஜன் தந்து 

காய்கனி தந்து உணவாகி, 

சருகானால் உரமாகி, காய்ந்துவிட்டால் விறகாகி, 

தன் வாழ் நாள் முழுக்க மனித குலம் மட்டுமன்றித் தன்னை நாடி வரும் பல்வேறு உயிர்களுக்கும் பயன் தரும் வாழ்வு வாழ்கிறது! 

இது போலத்தான் மனித குலம் பயனுற வாழ வேண்டும் என்று கருதித்தான் உயிர்கள் என மனித குலத்தைத் தமிழ்மொழி சிறப்பித்து அழைத்தது! 

பயிர்களுக்கு எண்ணங்கள் இல்லாவிட்டாலும் அவை பிறருக்காக வாழ வேண்டுமென்ற எண்ணமுடையவையாகத்தான் வாழ்கின்றன!

ஆனால் சிந்திக்கின்ற ஆற்றல் பெற்ற மனிதன்தான், பல்வேறு பிறவிகள் எடுத்தும் பெரும்பாலும் பிறந்தோம் வாழ்ந்தோம் மடிந்தோம் எனத் தம் பிறவி நோக்கம் அறியாமலே வாழ்ந்து தவிக்கிறான்! 

மனிதன் தன் முற்பிறவி அறியாமல் வாழ்ந்தாலும் இன்று அவன் கொண்டுள்ள எண்ணங்கள்தாம் அவனது அடுத்த பிறவியைத் தீர்மானிக்கின்றது!

பழி பாவத்திற்கு அஞ்சாத வஞ்சகர்களின் இன்றைய வாழ்க்கை முறை அவர்களின் அடுத்த பிறவிக்கு அவர்களே வகுத்துக் கொள்ளும் ஊழ்வினையாகும்! 

வள்ளுவமும் ஊழ்வினையின் எதிர்வினை எத்தகையது என்பது பற்றித் தெளிவாக இக்குறளில் எடுத்தியம்பியுள்ளது! 

“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே விளையும்” 

பிற்பகல் என்பது அடுத்த பிறவிக்கும் சேர்த்துச் சொல்லப்பட்ட ஆழமான கருத்துதான்!

பட்டினத்தார் இதையே தன்வினை தன்னைச்சுடும் என அழகாகப் பாடி வைத்தார்! 

உயிர் தாங்கிய மனித இனத்தை உரமிட்டு வளமாக்க இதை விடச் சிறந்த அறிவுரைகள் உலகில் எந்த மொழியிலும் இருப்பதாகத் தெரியவில்லை!

வள்ளுவம் எச்சரித்த ஊழ் வினையை மதியால் வெல்ல வள்ளுவத்தை முடிந்த அளவிற்குப் பின்பற்றி வாழத் துவங்குபவர்களால்தான் நிச்சயம் முடியும்!

இதை அலட்சியம் செய்துவிட்டுப் பொன்னிலும் போகத்திலும் மூழ்கி அடுத்தவர் உழைப்பில் களிப்பவர்கள் போலி மதவாதிகள் கற்பனையாக திரித்த நரகில் புகப்போவதில்லை! 

அடுத்த பிறவியில் அதற்கான கடும் தண்டனை இதே பூமியிலேயே இவர்களுக்குக் காத்திருப்பதை அறியாத பரிதாபத்திற்குரிய பாவிகள் அவர்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!